Tamilசெய்திகள்

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – முக்கிய குற்றவாளி கைது

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்த மோசடியை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது உள்ளிட்ட அதிரடிகளை தொடர்ந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்திருக்கிறது. இவை ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

சமீபத்தில் கூட ஜார்கண்டின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டார்.

பீகாரின் நாலந்தாவை சேர்ந்த இவர் தலைநகர் பாட்னா அருகே அதிகாரிகளிடம் சிக்கினார். இவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார். கைது செய்யப்பட்ட ராகேஷ் ரஞ்சன் பின்னர் பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராகேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாட்னா மற்றும் புறநகரில் 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முன்னதாக பீகார் மற்றும் ஜார்கண்டில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பல்வேறு ஆதாரங்கள மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது.

நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சி.பி.ஐ.யிடம் சிக்கியிருப்பது இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.