நீட் தேர்வு முடிவு – தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு கொரோனா 2-ம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்ததால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 10, 11 வகுப்பு தேர்வுகள் மற்றும் பருவ தேர்வுகளில் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

அதேநேரம் நீட் ஒரே ஒரு தேர்வுதான் என்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை பின்பற்றி தேர்வுகளை நடத்தலாம் என்றும் சிலர் வலியுறுத்தினர். இந்தச்சூழலில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 16.14 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில், மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இரண்டு மாணவர்களின் வினாத்தாள்கள், ஓ.எம்.ஆர். தாள்கள் மாறியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்ற தடை விதித்தது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று இரவு நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. அனைத்து மாணவர்களின் மின்னஞ்சல்களுக்கு நீட் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தையும், சேலத்தைச் சேர்ந்த மாணவி அர்ஜிதா 705 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்கள் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக ஓராண்டுகளாக தொடர்ந்து பயிற்சி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools