நீட் தேர்வு முடிவுகள் வெளியானது – ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தார்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.

நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகததால், இந்த தேர்வை எழுதியிருந்த மாணவ மாணவிகள் மத்தியில் பதற்றம் அதிகரித்தது.

இந்த சூழலில் நீட் தேர்வு முடிவுகளை நேற்று இரவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதன்படி தேர்வு எழுதிய 17,64,571 பேரில் 9,93,069 பேர் (56.3 சதவீதம்) தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம். இதில் 4 பேர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இருப்பினும், டை பிரேக்கர் முறையில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்தார்.

டெல்லியைச் சேர்ந்த வத்சா ஆஷிஷ் பத்ரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஹிருஷிகேஷ் நாகபூஷன் கங்குலே ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். ஒன்பது பேர் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 6வது முதல் 14 இடங்களை பிடித்தனர்.

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools