நீட் தேர்வு எழுதாமல் உலக அளவில் சாதனையாளர்களாக திகழும் தமிழக மருத்துவர்கள்!

உலகப்புகழ்பெற்ற தமிழக மருத்துவர்களான மோகன் காமேஸ்வரன், முகமது ரேலா, எஸ்.எம்.பாலாஜி, தணிகாசலம், கங்கா ராஜசேகர், போன்றோர் எந்த நீட் தேர்வை எழுதவில்லை என்பதை காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டியுள்ளார்.

மோகன் காமேஸ்வரனை பொறுத்தவரை காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சையில் உலகின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவராக திகழ்கிறார். அதேபோல் முகமது ரேலாவை பொறுத்தவரை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையில் உலகின் தலை சிறந்த மருத்துவராகவும், கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர் ராஜசேகர் உலகின் தலை சிறந்த ஆர்த்தோ மருத்துவராக திகழ்கிறார். விபத்தில் துண்டான பாகங்களை கூட அறுவைச் சிகிச்சை மூலம் ஒட்ட வைக்கும் அபார ஆற்றலை பெற்றவர்.

அதேபோல், முகச்சீரமைப்பு மற்றும் பல் மருத்துவத்தில் எஸ்.எம்.பாலாஜி உலக அளவில் நம்பர் ஒன் ஆக திகழ்வதோடு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்காக தமிழ் நாடு ஆளுநர் நியமித்த தேர்வுக்குழுவால் பரிந்துறைக்கபட்டவர் ஆவார்.

இதனிடையே இவர்கள் உட்பட இன்னும் ஒரு சில தமிழக மருத்துவர்களை குறிப்பிட்டும் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. விடுத்துள்ள பதிவு வருமாறு;

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால் தான் மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும் தான் தோன்றித்தனமாக பேசியுள்ளார். ஆளுநரின் ஆவணப் பேச்சுக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.”

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களான திரு.மோகன் காமேஸ்வரன், திரு.பழனிச்சாமி, திரு.முகமது ரீலா, திரு.எஸ்.எம்.பாலாஜி, திரு.தணிகாசலம், திரு.ராமமூர்த்தி, திரு.சத்தியமூர்த்தி, திரு.கங்காராஜசேகர், திரு.ஆர்.பி.சிங், திரு.கே.எம்.ஷெரியன், திரு.கஸாலி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? பதில் சொல்லுங்கள் ஆளுநர் அவர்களே!

தமிழ்நாட்டின் ஆளுநர், அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை சிதைக்கின்றார். அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு, உண்மைக்கு புறம்பாக, எந்தவொரு தரவுகள் இல்லாமலும் அவர் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசியுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயை லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்களுக்கு துணை போவதாக இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news