நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது? – நீதிபதி கேள்வி

மருத்துவ படிப்புக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்பு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆள் மாறாட்டம் மோசடி தமிழகத்தில் மட்டும் தான் நடந்துள்ளதா? நாடு முழுவதும் நடந்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், நீட் ஆள்மாறாட்டம் மோசடியின் 19 பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் ஆடை, தலைமுடி, காது என்று கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு மேல் உள்ள முகத்தை மட்டும் சோதனை செய்யாமல் விட்டு விட்டனர். தேர்வு எழுத வரும் மாணவர்களின் கைரேகையை மட்டும் பரிசோதிக்காமல், கண் ரேகையையும் சரி பார்க்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், ‘இந்த ஆள் மாறாட்ட மோசடியில் தந்தையுடன், மைனர்கள் பிள்ளைகளும் ஈடுபட்டுள்ளனர். அதனால், அந்த மைனர் மாணவர்கள் குறித்த விவரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது’ என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

‘நீட் ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றினால் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கில் சி.பி.ஐ. இணை இயக்குனரை ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், நீட் ஆள்மாறாட்டம் வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சி.பி.ஐ. தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் ஆள் மாறாட்டம், ஆவணங்கள் மாறாட்டம் செய்து யாராவது மருத்துவ படிப்பில் சேர்ந்து இருந்தால், அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் எதிர்காலத்தில் நீட் தேர்வை நியாயமாகவும், மோசடி நடைபெறாத வண்ணமும் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதேபோல, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் இந்தாண்டு 4 ஆயிரத்து 250 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களது கைரேகை பதிவை தற்போது ஆள்மாறாட்டம் மோசடி வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல, 4,250 மாணவர்களின் சேர்க்கையை தமிழக மருத்துவ கல்வி இயக்குனரும் மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கருத்து கூறினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools