நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு! – மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, அதன்மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் இதுபோன்று மோசடி செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை இன்று விசாரித்த செய்த நீதிமன்றம், உதித் சூர்யாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
அவர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பு ஆஜராகும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசயமம் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால் வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் தீட்டப்பட்டதுபோல் இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.