Tamilசெய்திகள்

நீட் தேர்வுக்கு விலக்கு – தமிழக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 19.9.2021 அன்று சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் 8-ந்தேதி  நடைபெறும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து  நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.