Tamilசெய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு  மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 2021-22 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-ந் தேதி தொடங்கியது. இதனிடையே நடப்பு ஆண்டு முதல் பி.எஸ்.சி.நர்சிங் (ஹானர்ஸ்) பட்டப்படிப்புகளுக்கும் நீட் தேர்வை ஒரு தகுதியாக எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சில செவிலியர் கல்லூரிகள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளன.

இதைத் தொடர்ந்து அதற்கு ஏதுவாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை சரிபார்த்து திருத்தங்களை மேற்கொள்ளவும், 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை http://neet.nta.nic.in மற்றும் https://nta.ac.in/ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என என்.டி.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.