பழங்குடியினர் தலைவர் பிர்சா முண்டா நினைவுநாள் நிகழ்ச்சியையொட்டி பழங்குடியினர் பெருமை தினவிழா கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், பழங்குடியின தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து பேசினார். அதன் பிறகு மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து பேசினார்.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட நேரம் கலந்துரையாடினார். அப்போது பழங்குடியினரின் பெருமைகளை எடுத்து கூறினார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு குறித்தும், அதற்கு தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்கள்.
நீட் விலக்கு கோரி தமிழக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.