Tamilசெய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு – தமிழக எம்.பி-க்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி, அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் அதிக அளவில் பணம் செலவழித்து பயிற்சி மையம் சென்று படிக்கும் வசதி படித்த மாணவர்கள் எளிதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இடத்தை பிடித்துவிடுகின்றனர்.

ஆனால், தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும், நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் வசதி இல்லாததால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வு தடையாக உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தமிழக அரசின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்காமல் உள்ளது.

இந்த நிலையில் இன்று தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருமாவளவன், சு.வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்டோர் அடங்கிய குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறது. அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கின்றனர்.