நாடு முழுவதும் எழுதிய நீட் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானதில் தமிழக மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். மேலும் 4 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்து தகுதி பெற்றனர். தமிழகத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதியதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 54 சதவீத தேர்ச்சியாகும்.
இந்த ஆண்டு உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் மருத்துவ கட்-ஆப் மார்க் உயருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த 12,997 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை இந்த வருடம் எழுதினார்கள். இதில் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 31 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 27 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 24 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த முறை அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் அரசு பள்ளி மாணவர்கள் 14,979 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4118 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு 461 பேர் எம்.பி.பி.எஸ். மற்றும் 106 பேர் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு எத்தனை பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை. 500 பேருக்கு குறையாமல் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எம்.எம்.சி., ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சேலத்தில் தான் அதிகபட்சமாக 2007 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இதில் 519 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 822 பேர் தேர்வு எழுதியதில் 131 பேர் தகுதி பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 597 பேர் எழுதியதில் 92 பேர் தேர்ச்சி பெற்றனர். தர்மபுரியில் 548 பேரும், கள்ளக்குறிச்சியில் 543 பேரும் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் 296 பேர் தேர்வு எழுதியதில் 93 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தான் அதிகளவில் தேர்வு எழுதினர்.