நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழகத்தின் நோக்கம். அதை தான் சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தி வருகிறோம். இருந்தாலும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் 413 மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல், பயிற்சி அளித்தோம். அதன் மூலம் நீட் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, உயர்ந்து இருக்கிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு பயிற்சி மூலம் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2,583 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் யார் வேண்டும் என்றாலும், வென்றுவிடலாம். பயிற்சியும், முயற்சியும் முக்கியம். இந்த இரண்டும் மாணவர்களுக்கு இருந்தால் போதும்.
கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இலவசமாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். வேறு எங்கும் இந்த திட்டம் இல்லை. ஏறத்தாழ 2,100 மாணவர்களுக்கு 9 கல்வி நிறுவனங்களில் 21 நாட்கள் முழுமையாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்வித்துறையை பொறுத்தவரையில், முதல்-அமைச்சர் ஒத்துழைப்போடு பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 583 பேரில், 400 மதிப்பெண் மற்றும் 300 முதல் 400 மதிப்பெண் வரை எடுத்த மாணவ-மாணவிகள் 39 பேர் ஆகும்.
உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா சென்னை வந்திருந்தார். அவர் நம்முடைய கல்வி முறையை பார்த்து வியந்து போனார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்க இருக்கிற கல்வி தொலைக்காட்சியையும், அண்ணா நூலகத்தையும் பார்த்தார்.
அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தன்னுடைய ஆராய்ச்சி படிப்புக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்துவதாக அவரிடம் தெரிவித்தார். நம்முடைய பாடத்திட்ட முறையையும் அவர் பார்த்தார். இரு மாநிலங்களும் இணைந்து கல்வி முறையில் என்னென்ன திட்டங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து எடுத்து சொன்னார்.
நீட் தேர்வு பயிற்சி பெற ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கே முன்னுரிமை அதிகம் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. தனியார் பயிற்சி நிறுவனத்துடன் ஈடுகொடுக்க முடியுமா? என்று சொன்னார்கள். அரசின் இலவச பயிற்சியை பார்த்து தற்போது பல மாணவர்கள் அரசை பாராட்டி இருக்கிறார்கள். இந்த திட்டம் தொடரும். படிப்படியாக தான் உயர்த்த முடியும். 3-வது ஆண்டில் (2020-ம் ஆண்டு) குறைந்தது 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.