நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ந்தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக கால் பதித்து புதிய சகாப்தத்தை படைத்தது. இதையடுத்து நிலவில் லேண்டர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு சிவசக்தி பாயிண்ட் என பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் அகில இந்திய இந்து மகாசபை தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுவாமி சக்ரபாணி மகாராஜ் கூறியதாவது:-
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு “சிவசக்தி பாயிண்ட்” என பெயர் சூட்டிய பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மற்ற மதத்தினர் நிலவை உரிமை கொண்டாடுவதற்கு முன்பு நிலவின் மீது இந்திய அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும். எந்த பயங்கரவாதிகளும் அங்கு சென்றடையாதவாறு இந்திய அரசு விரைவாக செயல்பட்டு இதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் உடனே நிறைவேற்ற வேண்டும்.
சந்திரயான்-3 லேண்டர் தரை இறங்கிய இடமான சிவசக்தி பாயிண்டை தலைநகரமாக கொண்டு இந்து நாட்டை நிலவில் இந்தியா உருவாக்க வேண்டும். நிலவை இந்து சனாதன ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
இவரது இந்த வீடியோ பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது. சுவாமி சக்ரபாணி மகராஜ், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவியபோது டெல்லியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் பங்கேற்ற இந்து மகாசபை உறுப்பினர்கள் அனைவரும் கொரோனாவை தடுக்க பசுவின் சிறுநீரை (கோமியம்) குடிக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.