Tamilசெய்திகள்

நிலத்தடி நீருக்கு வரப்போகும் பேராபத்து – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.

நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.

ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர் வா ழமுடியாது.

இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது.