நிர்பயா வழக்கு – கைதியின் மனைவி ஆஜராகததால் விசாரணை தள்ளி வைப்பு
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல வழிகளில் தூக்குத்தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் சட்ட நிபுணர்கள் ’அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன. ஆகவே இனியும் தூக்கு தாமதமாக சாத்தியம் இல்லை’ என்று கூறிவிட்டனர்.
இதற்கிடையே, அக்ஷய் குமார் சிங் என்ற தூக்குத்தண்டனை கைதியின் மனைவி புனிதா, ‘தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே கணவர் தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக்கொடுங்கள்’ என்று பீகார் மாநிலம் அவுரங்காபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட் மார்ச் 19-ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புனிதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.