நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றம்!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் இளம்பெண் டாக்டரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை கொன்று உடலை தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதையடுத்து பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதேபோன்று உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது.

இந்த நிலையில் பல்வேறு மாநில சிறைத்துறை சார்பில், 10 தூக்கு கயிறுகளை வருகிற 14-ந் தேதிக்குள் தயாரித்து தரும்படி, பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.

இதனால் டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools