நியூயார்க் நகரில் இன்று முதலீட்டாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
வெளிநாட்டு தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் அழைப்பு விடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார்.
கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் சென்ற அவர் 4 நாட்கள் லண்டனில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் கையெழுத்தானது. லண்டனில் புகழ்பெற்ற கிங்ஸ் ஆஸ்பத்திரியின் கிளையை சென்னையில் ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அங்கு நியூயார்க் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பஃபல்லோ நகரில் உள்ள மிகப்பெரிய கால்நடை பண்ணைக்கு சென்றார். அங்கு வளர்க்கப்படும் மாடுகளை பார்வையிட்டார்.
கால்நடை பண்ணையில் செயல்படுத்தப்படும் தொழில் நுட்பத்தைக் கொண்டு, பல்வேறு நாட்டு இன மாடுகளின் மரபணு பராமரிப்பு மற்றும் அந்த மரபணுவைக் கொண்டு, அதிகமாக பால் தரக்கூடிய கலப்பின மாட்டு இனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக கலப்பின மாடுகள் மற்றும் ஆடுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால் நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கேட்டறிந்தார்.
பண்ணையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தாழ்வான கொட்டகை அமைப்பு, சிறந்த எரு மேலாண்மை, ஒவ்வொரு கறவை பசுவையும் நிரந்தரமாக அடையாளம் காணுதல், உடல்நலம் பராமரிப்பு, சமச்சீர் தீவனம், தீவன வங்கிகள், பண்ணைப் பதிவேடு முறைகள், வெப்பம் மற்றும் குளிரினால் ஏற்படும் அயர்ச்சிகளைக் குறைக்கும் வழிமுறைகள், புதிதாக பிறந்த கன்றுகளின் உடல்நலம் சார்ந்த குறிப்பேடுகள், தடுப்பு ஊசி அட்டவணை, கன்று ஈனல், மடிவீக்க நோய், கருப்பை அழற்சி நோய், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
இன்று காலை நியூயார்க் சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு அங்குள்ள ஓட்டலில் முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நாளை புறப்பட்டுச் செல்கிறார்.