நியூசிலாந்து வீரர்கள் மீது குற்றம் சாட்ட வேண்டாம் – பாகிஸ்தான் தொடர் ரத்து குறித்து மெக்லெகன் கருத்து
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.
இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டு அரசு அறிவுறுத்தியதன் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. உடனடியாக நியூசிலாந்து அணி அந்த நாட்டில் இருந்து விளையாடாமலேயே திரும்பியது.
நியூசிலாந்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பாகிஸ்தான் மூத்த வீரர் முகமது ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து நியூசிலாந்து அணியை தாக்கி இருந்தார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்ததற்காக நியூசிலாந்து வீரர்களை குற்றம் சுமத்த வேண்டாம் என்று அந்நாட்டு வேகப்பந்து வீரர் மிச்சேல் மெக்லெகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்ததற்காக நியூசிலாந்து வீரர்களை குறைகூற வேண்டாம். ஏனெனில் அவர்கள் தங்களது அரசாங்கத்தின் ஆலோசனையை பின்பற்றுகிறார்கள். வீரர்களையோ, அமைப்பையோ குற்றம் சாட்ட வேண்டாம். எங்கள் அரசை குறை கூறுங்கள். அரசு சொல்வதைதான் வீரர்கள் கேட்டு உள்ளனர்.
அனைத்து வீரர்களுமே விளையாட வேண்டும் என்பதை விரும்பினார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மெக்லெகன் கூறி உள்ளார்.