நியூசிலாந்து நாட்டு பிரதமரை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா காலத்தின்போது தடுப்பூசி தயாரிப்புகளில் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் இருந்து வருகிறோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம்.

ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கையிலெடுத்துக் கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம். 5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இந்த தசாப்தத்தின் முடிவில் 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்னை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அந்நாட்டின் வெளிவிவகார மந்திரி நனையா மகுதாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools