நியூசிலாந்து துப்பாக்கி சூடு – ஆஸ்திரேலியர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது ஒரே ஒரு கொலை குற்றச்சாட்டு மட்டும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிரெண்டன் டாரன்ட் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார்.
முன்னதாக, மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.