நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (60), கேஎல் ராகுல் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுல் கேப்டனாக பணியாற்றினார். கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடி கொலின் முன்றோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ப்ரூஸ் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
இதனால் 17 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு செய்பெர்ட் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றது.
நியூசிலாந்து 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 11 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 10-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் நான்கு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அப்போது போட்டி இந்தியாவின் கையில் இருந்து முழுவதுமாக விலகிச் சென்றது போல் இருந்தது. நியூசிலாந்து அணிக்கு 60 பந்தில் 60 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த நிலையில் 11-வது ஓவரில் சாஹல் 9 ரன்களும், 12-வது ஓவரில் பும்ரா 6 ரன்களும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர்.
13-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்து அரைசதம் அடித்த சைபெர்ட் 4-வது பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சைனி அதிரடியாக விளையாடிய சைபெர்ட்-ஐ வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார். சைபெர்ட் 30 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்த பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதனால் கடைசி ஆறு ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 10 ரன்களே அடிக்க முடிந்தது.
17-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் சான்ட்னெர், குகலின் ஆகியோரை வெளியேற்றி 4 ரன்களே கொடுத்தார் ஷர்துல் தாகூர். 18-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லரை ஆட்டமிழக்கச் செய்தார். அத்துடன் போட்டி இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி 12 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது 19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிம் சவுத்தியை வீழ்த்திய பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் அந்த ஓவரை வீசினார். 2-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் இஷ் சோதி. ஆனால் ஷர்துல் தாகூர் கடைசி இரண்டு பந்தையும் சிறப்பாக வீச நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து சாதனைப் படைத்தது. 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். லோகேஷ் ராகுல் தொடர் நாயகன் விருதை பெற்றார்.