நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! – முதல் நாளில் இங்கிலாந்து 4/241 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜோ பேர்ன்ஸ், சிப்லே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 52 ஆக இருக்கும்போது சிப்லே 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பேர்ன்ஸ் உடன் டென்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. என்றாலும் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்கள் விட்டுக்கொடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். டென்லி 74 ரன்களும், பேர்ன்ஸ் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும், போப் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.