Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – வங்காளதேசம் வெற்றி பெற்று வரலாறு சாதானைப் படைத்தது

நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11, நிக்கோல்ஸ் 2, டாம் ப்ளண்டெல் 6, பிளிப்ஸ் 12, ஜெமிசன் 9 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் அரை சதம் விளாசினார். இவர் 58 ரன்கள் எடுத்திருந்த போது நயீம் ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சவுதி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 24 பந்துகள் சந்தித்து 34 ரன்கள் எடுத்தார். பொறுமையாக விளையாடி சோதி 91 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆனார்.

இதன் மூலம் வங்காளதேசம் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரே ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தங்கள் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வரலாற்று சாதனை படைத்தது.