X

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – பாகிஸ்தான் வெற்றி

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 60 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.