நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 234 ரன்களை குவித்தது.

இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசினார். இவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி, கேப்டன் ஹர்த்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 33, 30 மற்றும் 24 ரன்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலென், தேவன் கான்வே தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன், கிலென் பிலிப்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி துவக்கத்திலேயே விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் காரணமாக வெற்றி இலக்கை துரத்த முடியாமலும், விக்கெட் சரிவை நிறுத்த முடியாமலும் நியூசிலாந்து அணி போராடியது. நியூசிலாந்து வீரர்கள் துவக்கத்திலேயே விக்கெட்களை இழக்க, அந்த அணியின் டேரில் மிட்செல் மட்டும் நிதானமாக ஆடி வந்தார். 12.1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 66 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மூன்றாவது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தியா சார்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools