நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் தோல்வி குறித்து ஹர்த்திக் பாண்ட்யா கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 177 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டேரில் மிச்சேல் 30 பந்தில் 59 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்), கான்வே 35 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), பின் ஆலன் 23 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், அர்தீப் சிங், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்னில் தோல்வியை தழுவியது. 6-வது வீரராக ஆடிய வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அவர் 28 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், சான்ட்னெர், பெர்குசன் தலா 2 விக்கெட்டும், ஜேக்கப் டபி, சோதி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தை கணிக்க தவறிவிட்டோம். ஆடுகளம் இப்படி இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு அணிகளுமே ‘பிட்ச்’ குறித்து ஆச்சரியம் அடைந்தன. ஆனால் எங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. அதனால் தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக ஆடுகளத்தில் திரும்பியது. சுழற்பந்து வீச்சு திரும்பிய விதமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.நானும், சூர்யகுமார் யாதவும் பேட்டிங் செய்யும் வரை இலக்கை எட்டி விடலாம் என்று நினைத்தோம். நாங்கள் பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டோம். கூடுதலாக 25 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எங்களது பந்து வீச்சு குழு இளமையானது. இதனால் அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் நன்றாக செயல்பட்டார். அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். பந்தும் வீசுகிறார். எங்களுக்கு அதிகமான நம்பிக்கையை அளிக்கிறார். இது அணிக்கு உதவும். நாங்கள் முன்னேறி செல்கிறோம். இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார். இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை (29-ந்தேதி) நடக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools