Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்தனர். கான்வே 46 ரன்னும், வில்லியம்சன் 45 ரன்னும், லாதம் 43 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் அசத்தலாக பந்து வீசினர். இதனால் 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ஆகியோர் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

அலெக்ஸ் கேரி 85 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிரீன் 89 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.