இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின், நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 539 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 176 ரன்னிலும், ஒல்லி போப் 145 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் 67 ரன்னிலும், விக்கெட் கீப்பர் போக்ஸ் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வில் யங் 56 ரன்னும், கான்வே 52 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் இறுதிவரை போராடி 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்திற்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டத்தில் கடைசி நாளான நேற்று இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்சை விளையாடியது. 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை அந்த அணி இழந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 92 பந்துகளில் 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.