X

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 325 ரன்கள் குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணி 62 ரன்னில் சுருண்டது.

263 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மொத்தமாக 539 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், நியூசிலாந்துக்கு 540 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மிகப்பெரிய இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது. நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. நிக்கோல்ஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிக்கோல்ஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமிசன் (0), டிம் சவுத்தி (0), சோமர்வில் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்கவும், ரவீந்திரா 18 ரன்னில் வெளியேறவும் நியூசிலாந்து 167 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின், ஜயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தயா 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.