Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் – கேப்டனாகும் கே.எல்.ராகுல்?

20- ஓவர் உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்த இந்திய அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏறத்தாழ மங்கி விட்டது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட மனச்சோர்வே இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் கூறியுள்ளன.

மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.