Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி முறையே 53 ரன், 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 55 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கைல் ஜாமிசன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் பிஞ்ச் 4 சிக்சர்களை தெறிக்க விட்டார்.

அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 106 ரன்னில் அடங்கியது. இதனால் ஆஸ்திரேலியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் வில்லியம்சன் (8 ரன்), கப்தில் (7 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அதிகபட்சமாக கைல் ஜாமிசன் 30 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையே தொடரை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு) நடக்கிறது.