X

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 – ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஆவார். நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் மார்க் சாப்மன் சேர்க்கப்பட்டார்.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (69 ரன், 44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் (70 ரன், 31 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் விளாசினர். இதில் ஜேம்ஸ் நீஷம் வீசிய ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி, 2 சிக்சர் என்று 28 ரன்கள் திரட்டி அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் (4 ரன்), கேப்டன் கேன் வில்லியம்சன் (9 ரன்) விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் சாய்த்து ஆரம்ப ரன் வேகத்தை முடக்கினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் ஒரே ஓவரில் (13-வது ஓவர்) 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலைய செய்ததுடன், கடைசி கட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினார்.

நியூசிலாந்து அணி 17.1 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 43 ரன்னும், கான்வே 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்டன் அகர் 6 விக்கெட்டும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதில் 30 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை ருசித்து 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி இதே மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி காலை 11.30 மணி) நடக்கிறது.