Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – 242 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடந்த போட்டியைப் போன்று இந்த போட்டியிலும் கைல் ஜேமீசன் , இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 7 ரன்களில் டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் பிருத்வி ஷா, புஜாரா ஆகியோர் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் இருவரும் தலா 54 ரன்களில் ஆட்டமிழந்தனர். இரு விக்கெட்டுகளையும் ஜேமீசன் கைப்பற்றினார். ரிஷப் பண்ட் (12), ஜடேஜா(9), உமேஷ் யாதவ் (0) ஆகியோரையும் ஜேமீசன் வீழ்த்தினார்.

கேப்டன் கோலி 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சவுத்தி பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் ரகானேவும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து, சவுத்தி ஓவரில் ஆட்டமிழந்தார். 55 ரன்கள் சேர்த்த விகாரி, வாக்னரிடம் விக்கெட்டை இழந்தார். இறுதியாக ஷமி 16 ரன்களில் நடையைக் கட்ட, இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்து தரப்பில் ஜேமீசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக லாதம், புளுண்டேல் ஆகியோர் களமிறங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *