இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் ஜனவரி 24-ம் தேதி தொடங்குகிறது. ஆண்களுக்கான டி20 போட்டி தொடங்கும்போது பெண்களுக்கான டி20 போட்டியும் தொடங்க உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் தலைமையின் கீழ் முதல் சர்வதேச தொடரில் விளையாட உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் போட்டியில் சொதப்பியதால் மிடில் ஆர்டர் பேட்டிங் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு தொடர்களிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் மோனா மேஷ்ராம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிவிரைவாக பந்துவீசக்கூடிய ஆல்ரவுண்டர் ஷிகா பாண்டே டி20 அணிக்கு திரும்பி உள்ளார்.
22 வயது நிரம்பிய டெல்லி வீராங்கனை பிரியா பூனியா, தற்போது நடைபெற்று வரும் சீனியர் பெண்கள் ஒருநாள் லீக் தொடரில் இரண்டு சதம் விளாசியதையடுத்து, அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகிறார்.
ஒருநாள் போட்டித் தொடருக்கான அணி விவரம்:
மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், பூனம் ராவத், தீப்தி ஷர்மா, ஹேமலதா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மோனா மேஷ்ராம், ஏக்தா பிஷ்த், பூனம் யாதவ், ராஜேஷ்வரி கயாக்வாட், ஜுலன் கோஸ்வாமி, மன்சி ஜோஷி, ஷிகா பாண்டே.
டி20 போட்டித் தொடருக்கான அணி விவரம்:
ஹர்மன்பிரீத் கிவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், தீப்தி ஷர்மா, ஜெமியா ரோட்ரிகஸ், அனுஜா பாட்டில், ஹேமலதா, மன்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ஏக்தா பிஷ்த், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பிரியா பூனியா.