X

நியூசிலாந்தில் துப்பாக்கிக்கு தடை! – புதிய சட்டம் அறிமுகம்

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மந்திரி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜெசிந்தா கூறியிருப்பதாவது:

நியூசிலாந்தில் செயல்பாட்டில் இருக்கும் ராணுவத்தில் உள்ளதை போன்ற தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மேகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். எளிதாக சொல்லவேண்டுமென்றால், கடந்த வெள்ளி அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாகிகள் நாடு முழுவதும் தடை செய்யப்படும்.

இந்த தடை அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைபடுத்தப்படும். இது தொடர்பாக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும். மேலும் தாக்குதல் நடத்திய அந்த நபர், துப்பாக்கிகளை சட்டபூர்வமாக ஆன்லைனில் வாங்கி, அதனுடன் 30 குண்டுகள் போடப்படும் அளவிற்கான மேகசினை இணைத்து தாக்குதல் நடத்தியுள்ளான்.

இவ்வாறு அவர் கூறினார்.