தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரமத்தில் வைத்து பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010-ம் ஆண்டு நித்யானந்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராமநகர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நித்யானந்தா தனது ஆசிரமத்தில் இருந்து மாயமாகி உள்ளார். அவர் வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதுபற்றி கர்நாடக மத்திய மண்டல ஐ.ஜி. தயானந்தா கூறுகையில், ‘நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என நான் நினைக்கவில்லை. அவர் மீது முக்கிய வழக்கு ஒன்று கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காலாவதியான அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்க போலீஸ் சூப்பிரண்டு அனுமதி மறுத்தார். இதனால் அவர் சட்டத்துக்கு உட்பட்டு வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. அவர் வடஇந்தியாவில் இருக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.