நித்யானந்தா பற்றி எந்த தகவலும் தெரியவில்லை – மத்திய அரசு
கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை நடத்தி வரும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அங்குள்ள அவரது ஆசிரம கிளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தி 4 குழந்தைகளை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகளான 2 பெண் சீடர்கள் உள்பட மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடரை கற்பழித்ததாக கர்நாடக மாநிலம் ராம்நகர் கோர்ட்டில் நித்யானந்தா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இதைப்போல மேலும் சில வழக்குகள் அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாமியார் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளார்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் அவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஈகுவடார் நாட்டில் அவர் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவர மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கின.
ஆனால் நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நித்யானந்தாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் பல நாடுகளின் தூதரகங்களையும், அரசுகளையும் நாடியுள்ளோம். நித்யானந்தா குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறோம்.
ஆனால் இது தொடர்பாக ஈகுவடார் நாட்டை தொடர்பு கொண்டபோது அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டார்.