Tamilசெய்திகள்

நித்யானந்தா ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – பெற்றோர் புகார்

பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் மீதும், அவர் மீதும் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜனார்த்தனசர்மா என்பவர் அகமதாபாத் போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்தார். தனது 3 மகள்களை பெங்களூருவில் உள்ள நித்யானந்தா கல்வி நிலையத்தில் சேர்த்து இருந்ததாகவும் அவர்களை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி வந்து சித்ரவதை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஜனார்த்தன சர்மாவின் கடைசி மகளை மீட்டனர். மற்ற 2 மகள்களான லோபமுத்ரா (வயது 21), நந்திதா (18) ஆகியோரை மீட்கவில்லை. அவர்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நித்யானந்தா மீது குழந்தை கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை நடந்து இருப்பதாக ஜனார்த்தன சர்மா கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாடுகளில் நித்யானந்தா ஆன்மீக சுற்றுப்பயணம் செய்வார் அப்போது பங்கேற்பவர்களிடம் ஒரு நபருக்கு 10 முதல் 15 லட்சம் கட்டணமாக வசூலிப்பார். இந்த சுற்றுப்பயணங்களுக்காக எனது முதல் மற்றும் இரண்டாவது மகள்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்படி சில நாடுகளுக்கு என் குழந்தை உள்பட 12 , 15, 16 வயது பெண் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் வேலை என்னவென்றால், எங்கள் சுவாமியால் என்ன மாதிரியான சக்தியும் கொடுக்க முடியும் என்று மார்க்கெட்டிங் செய்வார்கள்.

என்னுடைய 2-வது மற்றும் 3-வது பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தார்கள். 3-வது பெண்ணிடம் பாஸ்போர்ட் இல்லை. என்னிடம் பாஸ்போர்ட் கேட்டபோது தான் இந்த வி‌ஷயம் எனக்கு தெரிந்தது. இதை எதிர்த்து நான் பெரும் பிரச்சினை செய்தேன்.

நான் கேள்வி கேட்பதை உணர்ந்த அவர்கள், என்னை கார்னர் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்பிறகு எனது மகள்களை டெல்லியில் ஆன்மீக பிரச்சாரத்தில் சந்தித்தபோது சில பிரச்சினைகள் இருப்பதை சொன்னார்கள்.

இதற்கிடையே எனது மகளை போல் அங்கு படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லாம், எங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அவர்களிடம் சி.பி.எஸ்.இ. கல்வி கற்று தருகிறேன். ஐ.சி.எஸ். கல்வி கற்றுத்தருகிறேன் என நேரத்திற்கு ஒன்றாக பேசி சமாளிப்பார். இதையடுத்து அகமதாபாத் ஆசிரமத்திற்கு குழந்தைகளை மாற்றினார்.

அகமதாபாத்தில் இருந்து என் குழந்தைகள் இங்கு இருக்க எனக்கு கஷ்டமாக இருக்கு, தயவுசெய்து வந்து என்னை அழைத்துக்கொண்டு போங்க என்று என் மனைவியிடம் சொன்னார்கள். உடனடியாக என் மனைவி எங்கள் குழந்தைகளை பார்ப்பதற்காக அகமதாபாத் போயிருக்கிறார். ஆனால் அங்கு அவரை உள்ளே விடவில்லை. சுமார் 4 மணி நேரம் கேட் வாசலிலில் நின்று என் மனைவி போராட்டம் செய்த பிறகு, என்னுடைய 3 குழந்தைகளையும் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். சுமார் 15 நிமிடம் பேச அனுமதித்ததுடன் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

அப்போது என் மனைவி அவர்களிடம் என் குழந்தையிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று கேட்டபோது மறுக்கிறார்கள். அப்போது கடும் விவாதம் நடந்திருக்கிறது. இதை என் மனைவி என்னிடம் போனில் சொன்னார். இதையடுத்து எனக்கும், நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னுடன் ரஞ்சிதா உள்பட நிர்வாகிகள் போனில் கடும் விவாதம் செய்தார்கள். என்னிடம் அனுப்பவில்லை. இதையடுத்து குழந்தைகளை அழைத்து செல்ல முடிவு செய்த நான் வாரணாசியில் இருந்து அகமதாபாத் சென்றேன். செல்லும் வழியிலேயே எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் போனில் வந்தது. அதையும் தாண்டி நான் அகமதாபாத் சென்றேன். அங்கு என்னையும் குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கவிடவில்லை. நான் சண்டை போட்டு உள்ளே போனால் என்னுடைய இரண்டு குழந்தைகளை மட்டும் சந்திக்க அனுப்பினார்கள். பெரிய குழந்தையை அனுப்பவில்லை. கேட்டால் 18 வயது ஆகிவிட்டது அவள் உங்களை பார்க்க விரும்பவில்லை என்றார்கள்.

ஆனால் என் குழந்தைகளோ இன்று எங்களை அழைத்துச் செல்லாவிட்டால் இனி அழைத்துச்செல்லவே முடியாது என்று தெரிவித்தார்கள். எனினும் குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த நாங்கள் அகமதாபாத் போலீசில் புகார் அளித்தோம். அதன்பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரவு 8 மணி அளவில இரண்டு குழந்தைகளை அனுமதித்தனர். என் பெண்ணுக்கு அங்கு நடந்த அருவருப்பு சம்பவங்கள் குறித்து அப்போது தான் தெரியவந்தது. என் பெண் இரண்டு மூன்று முறை கற்பழிக்கப்பட்டதாக சொன்னார். அந்த கற்பழிப்பு மைனராக இருக்கும்போது நடந்திருக்கிறது. அந்த கற்பழித்தவனுடன் என் பெண் குடும்பம் நடத்தி கொண்டிருப்பதாக என் பெண்ணை வைத்து பேச வைத்திருக்கிறார்கள்.

என் குழந்தைகளை மீட்க நடவடிக்கை தேவை. நித்யானந்தா ஆசிரமத்தில் ஆபாசமான அருவருப்பான சம்பங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ளேன். என் மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மகள்கள் உள்பட பல்வேறு பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்தி செல்லப்பட்டதாக அறிகிறேன். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறையிடம் புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

என் மகள்களை யாருடைய அனுமதியும் இல்லாமல் வெளிநாடு அழைத்துச்சென்றது தவறு. அங்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மகள்கள் எனக்கு உயிரோடு கிடைத்தால் போதும். அதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மன்னார்குடி, செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் கூறியதாவது:-

நித்யானந்தாவை தேச துரோக குற்றச்சாட்டில் மத்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். சாமியாராக கோ‌ஷம் போடும் அவர் நடத்தும் ஆசிரமங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *