Tamilசெய்திகள்

நித்யானந்தாவை 18ஆம் தேதிக்குள் கைது செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகார், பெண்களை கடத்தி வைத்து சித்ரவதை உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு ஆளான சர்ச்சை சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு பதுங்கி இருக்கிறார்? என்ற விபரம் தெரியவில்லை.

பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தனது 2 மகள்களை நித்யானந்தா கடத்தி வைத்திருப்பதாக குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 2 பெண்களையும் இந்திய தூதரகத்தில் ஆஜர்படுத்த தயார் என்று அந்த 2 பெண்களின் வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடும்போது கூறினார். ஆனால் இதை குஜராத் ஐகோர்ட்டு ஏற்கவில்லை. கோர்ட்டில் நேரில் அவர்களை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நித்யானந்தா மீது பெண் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்பவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் சரச்சை சாமியார் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ராம்நகர் மாவட்ட 3-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு நித்யானந்தா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நித்யானந்தாவிடம் கார் டிரைவராக இருந்த லெனின் கருப்பன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நித்யானந்தா மீது ஆர்த்திராவ் என்பவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ராம்நகர் மாவட்ட 3-வது செசன்சு கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா நேரில் ஆஜராக நீதிபதி 44 முறை விலக்கு அளித்துள்ளார். அவர் நிம்மதியாக நடமாடுகிறார்.

ஆனால் வழக்கு தொடர்ந்த எனக்கு கோர்ட்டு சம்மன் அனுப்புகிறது. இதனால் என்னால் நிமமதியாக இருக்க முடியவில்லை. ஆனால் நித்யானந்தாவை ஆஜர்படுத்த சம்மன் அனுப்பவில்லை.

மேலும் ராம்நகர் கோர்ட்டும், அரசு வழக்கறிஞரும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கு விசாரணை ராம் நகர் கோர்ட்டில் நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும். ராம்நகர் கோர்ட்டு இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை.

எனவே கர்நாடக ஐகோர்ட்டே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் லெனின் கருப்பன் கூறி இருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 12-ந் தேதிக்குள் நித்யானந்தா இருப்பிடத்தை கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி நரேந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இருப்பிடத்தை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் கால அவகாசம் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த விவரங்களை அளிக்கவும், அவர் இருக்கும் இடம் பற்றி தெரிவிக்கவும் கால அவகாசம் கேட்பது சரியல்ல.

நித்யானந்தா எங்கு உள்ளார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதா? பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரை இந்தியாவில் இருந்து எப்படி வெளியேற விட்டீர்கள்? நித்யானந்தா வராமல் வழக்கு விசாரணையை எப்படி நடத்த முடியும்?.

ராம் நகர் நீதிமன்றம் நடத்தி வரும் விசாரணையை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்த வேண்டும். அந்த கோர்ட்டில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும், வருகிற 18-ந் தேதிக்குள் நித்யானந்தா எங்கு இருக்கிறார்? என்பதை கண்டுபிடித்து அறிக்கையாக கர்நாடக அரசும், போலீசாரும் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

வழக்கு விசாரணையை 18-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *