X

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் மம்தா பானர்ஜி

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வரும் 27-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் வங்காளத்தையும் அதன் அண்டை மாநிலங்களையும் பிரிக்கும் சதி குறித்து விளக்குவேன்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் அரசியல் சார்புக்கு எதிரான எனது கண்டனத்தை கூட்டத்தில் பதிவுசெய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வேன். அப்படி இல்லையெனில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வேன் என தெரிவித்துள்ளார்.