நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் – ஐக்கிய ஜனதாதளம் கருத்து
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இடம்பெற்றுள்ளது. இரு கட்சிகளும் பீகாரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்களை சேர்ப்பதில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. சமீபத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடியை பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதாதள எம்.பி.க்கள் குழு தலைவர் உபேந்திர குஷ்வாகா, நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு மாநில பா.ஜனதா தலைவர்கள், பிரதமர் ஆவதற்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில், உபேந்திர குஷ்வாகாவிடம் நேற்று இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
பெரும்பான்மையை ஏன் திரட்ட முடியாது? நாங்கள் தற்போது பிரதமர் பதவியை கோரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம்.
ஆனால், எதிர்காலத்தில் நடப்பதை பற்றி யூகத்துடன் பேசுவதாக இருந்தால், அது நடக்காது, இது நடக்காது என்று எதையும் நிராகரிக்க முடியாது.
நிதிஷ்குமார் பிரதமர் ஆகும் சூழ்நிலை வந்தால், பெரும்பான்மையை திரட்டுவது ஒரு பிரச்சினையாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் பதவி குறித்து கட்சியினர் பேசி வருவது குறித்து நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். ஆனால் அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.