X

நிதிஷ்குமார் சிறந்த முடிவை எடுத்திருக்கிறார் – சரத்பவார் பேட்டி

பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும், குடும்ப கட்சிகள் அழிந்து போகும் என்று சமீபத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார். மேலும் பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை அமைத்த நிதிஷ்குமார் நாட்டின் அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளார். இவற்றை மேற்கோள் காட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனே மாவட்டம் பாராமதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிராந்திய கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை, அவர்களது கட்சியை (பா.ஜனதா) போன்றவை மட்டும் நாட்டில் இருக்கும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் கூறியிருப்பதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. இதுவும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் அதிருப்தியாக இருக்கலாம். பா.ஜனதா தனது பிராந்திய கூட்டணி கட்சிகளை படிப்படியாக அழித்து வருகிறது.

பா.ஜனதாவின் தனி சிறப்பு என்னவென்றால், அவர்கள் எந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த பிராந்திய கட்சிகள் பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் தான் வெற்றி பெறுகிறது. பஞ்சாப்பில் பிரகாஷ் சிங் பாதலின் அகாலி தளத்துடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருந்தது. இன்று அகாலி தளம் ஏறக்குறைய முடிந்து விட்டது.

மராட்டியத்தில் சிவசேனாவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்திருந்தார்கள். இன்று சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, அந்த கட்சியை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று பா.ஜனதா முயற்சித்து வருகிறது. பீகாரில் இதே காட்சி இருந்தது. அங்கு பா.ஜனதாவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்தது.

ஐக்கிய ஜனதாதளம் குறைவான இடங்களே பிடித்தது. நிதிஷ்குமாரை பா.ஜனதா தலைவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். பா.ஜனதா நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அவர் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார். அவரது மாநிலத்திற்கும், அவரது கட்சிக்கும் இது ஒரு சிறந்த முடிவு என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.