X

நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்கள் உள்ளன – எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக அரசில், பாரதப் பிரதமரை நான் நேரில் சந்திக்கும்போதும், கடிதங்களின் வாயிலாகவும் அதிமுக அரசின் கனவுத்  திட்டமான கோதாவரி – காவேரி இணைப்பினை நிறைவேற்றிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தேன்.  அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்புத்  திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பாரதப் பிரதமருக்கு, அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கங்கை-கோதாவரி-கிருஷ்ணா–காவேரி–பெண்ணையாறு நதிகள் இணைப்புத்  திட்டம் இறுதி  செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு  செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த   நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும், எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்களும் உள்ளன.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடு எதிர்பார்க்கப்படுகிறது.

* மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, 1 லட்சம்  கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.  இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* விவசாயிகளிடம் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.70 லட்சம் கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.

* நடப்பு நிதி  ஆண்டில் பிரதமர் வீடு  வழங்கும்  திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* 3.80 லட்சம் கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

* 60 லட்சம் பு ய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

* கொரோனா நோய்ப் பெருந்தொற்று போன்ற நோய்களின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, நாடு முழுவதும்  தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

* மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத்  திட்டத்தில் சலுகை அறிவித்துள்ளதை  வரவேற்கிறேன்.

* ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  சிறு குறு நிறுவனங்களுக்கு  2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

* 2030-ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம். இந்த ஆண்டு இதற்காக 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ராணுவத் தளவாட உற்பத்தியில் 68 சதவீத தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராக இருக்கும்போதே, தமிழ்நாட்டில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில்களைத் தொடங்குவதற்கு சேலம்,  திருச்சி, ஓசூர் போன்ற ஒரு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

* 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  மேலும், 200 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

* நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி  ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* சுமார் 1 லட்சம் அஞ்சலகங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாடு முழுவதும் உள்ள தபால் துறை ஊழியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

* 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், மேலும் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு உலகத் தரத்திற்கு ஈடாக சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், துரித சாலைப் போக்குவரத்து வச  மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும்.

* எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.  எனவே, வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.  எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்.

* மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி  ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும்  திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை,  60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

அதிமுக சார்பில் பிரதமருக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட்டை அமைத்த நிதி அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிடிட்டுள்ளார்.