மும்பையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் பரவல், மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டிய அவசியத்தை அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த பணியில் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசாரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக மும்பையில் உள்ள அனைத்து போலீஸ் மண்டலத்திலும் நாள் ஒன்றுக்கு முகக்கவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்கும்படி இலக்கு நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் சைதன்யா கூறியதாவது:-
போலீஸ் மண்டலங்களில் ஒருநாளைக்கு முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயித்ததற்கு காரணம், மக்களிடம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அரசு நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.
முககவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத்தில் 50 சதவீதம் போலீசாரின் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். 50 சதவீதம் மும்பை மாநகராட்சியிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை நகரம் 12 போலீஸ் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பொது இடங்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியது வரும். இதனால் உஷாராக இருக்கும்படி போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறியதாக 57 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 947 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதி முதல் பொது இடங்களில் முககவசம் அணியாத 10 ஆயிரத்து 490 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.