X

நாளை மோடி பிரதமராக பதவி ஏற்கிறார் – பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி

பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளனர். முதல் கட்டமாக 30 மந்திரிகள் வரை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூடான், நேபாளம், மொரீசியஸ், செசல்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் வெளிநாட்டு தூதர்கள், தொழில் அதிபர்கள், மற்ற கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை நாளைய விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள் டெல்லியில் உள்ள லீலா, தாஜ், ஐ.டி.எஸ்.மவுரியா, ஓபராய் உள்பட பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட உள்ளனர். அவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு சிறப்பு பாதை வழியாக ஜனாதிபதி மாளிகைக்குள் அழைத்து செல்லப்படுவார்கள்.

இதையொட்டி டெல்லியில் நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பல சாலைகளில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கமாண்டோ படை வீரர்கள், துணை நிலை ராணுவத்தினர் டெல்லியில் முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரும் பாதைகளில் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பும் செய்யப்பட்டு வருகிறது.

டெல்லியில் இன்று முதல் 10-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. குட்டி விமானங்கள் சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகையை சுற்றி 5 அடுக்கு துணை நிலை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா மேடை அருகே மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது போன்ற பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

இது தவிர டெல்லியில் முக்கிய பகுதிகளில் 2,500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் 2,500 போலீசார் ஜனாதிபதி மாளிகை உள்ளே பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்படுவார்கள். இன்றும், நாளையும் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இதற்காக இன்று காலை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள், முக்கிய தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் எந்தெந்த வழிகளில் வரவேண்டும் மற்றும் விழா மேடை அருகே எங்கெங்கு அமர வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்கு ஏற்ப விழா அரங்கில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.