பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் சென்னை திரும்பினார்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என்று நிருபர்களிடம் சைகை மூலம் கூறிய சம்பவம் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் பூரண நலமடைந்து தனக்கே உரித்தான அந்த கம்பீர பாணியில் பொதுக்கூட்டங்களில் மீண்டும் பேச வேண்டும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘நமது தலைவர் கேப்டன் நாளையும் நாளை மறுநாளும் நமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.