X

நாளை முதல் தியாகராயா பகுதியில் போக்குவரத்து மாற்றம் – சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

தித்திக்கும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்குவதற்காக தியாகராயநகர் பகுதியில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே இப்பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தியாகராயநகர் வட்டார பகுதிகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகைத் தர வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 8-ந்தேதி (நாளை) முதல் 24-ந்தேதி வரை தியாகராயநகர் பகுதியில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* ஆட்டோக்களின் இயக்கம் தேவைக்கு ஏற்ப தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பு, ரோகிணி சிக்னல் சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலை சந்திப்பு, மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பு, பிருந்தாவன் சந்திப்பு மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்து பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

* சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தியாகராயநகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும். இத்தகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை அனுமதிக்கப்படும்.

* தற்போது பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். பொதுமக்களும், வணிகர்களும் போக்குவரத்து போலீசாருக்கு தக்க ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.