நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் அதிகரிப்பு
தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டங்களுக்குள் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தொடங்கியது.
அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பின் காரணமாக பஸ்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்கிறார்கள்.
அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 400 பஸ்கள் இயக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் இல்லாததால் தற்போது 300 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை)வார இறுதி நாள் என்பதால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தினமும் 5 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள். தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் பயணம் செய்ய 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் பஸ்களில் படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்யாமலும் பலர் பயணம் செய்ய முன்வருகிறார்கள்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகளை அனுமதிக்கிறோம். நாளை (வெள்ளி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும். வருகிற நாட்களில் அதனை கணக்கிட்டு கூடுதல் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.