தமிழகத்தின் தலைநகர் சென்னை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனமழை பெய்தால் எப்படி தாக்கு பிடிப்பது? என்பது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் தவிப்பாகவும், மனக்கவலையாகவும் இருக்கிறது. எனவே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானாலே, சென்னை மக்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் தொற்றி கொள்கிறது.
எனவே சென்னையில் வரும் நாட்களில் மழைப்பொழிவு எப்படி இருக்கும்? என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசனிடம் கேட்டபோது, ‘சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையை இன்று எதிர்பார்க்கலாம். அதன்பின்னர் சென்னைக்கு மழை வாய்ப்பு குறைந்துவிடும். இனி, தென்மாவட்டங்களில்தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார்.
சென்னையில் மழை குறையும் என்ற தகவல் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.