தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவானது. மேலும், கடல் காற்றால் காற்றின் ஈரப்பதம் அளவு 70 சதவீதம் வரை உள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குறைந்தபட்ச வெப்ப நிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் காணப்படும். கடற்கரையோர மாவட்டங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை காற்றில் ஈரப்பதம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் மே 2-ந்தேதி வரை தமிழக வட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி வரையும் வெப்பம் இருக்கும்.
மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் மிக கடுமையான வெப்ப அலை வீசும்” என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை மறுநாள் (புதன்கிழமை) மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மே 1-ந்தேதிக்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்ப தாக்குதல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் மே 1-ந்தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதற்கிடையே தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4-ந்தேதி வரை அதன் உச்சத்தை அடைய வாய்ப் புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “மே 1 முதல் 4-ந்தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் உள்மாவட்டங்களில் மே 5-ந்தேதிக்குப் பின் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்து உள்ளார். இதனால், மே தொடக்கத்தில் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க ஆங்காங்கே அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் தண்ணீர், மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மாநில அரசு சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்ப மின்சார தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இரவில் மின் நுகர்வு அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பகலிலும் அதிக அளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது. வீடு, அலுவலகங்களில் ஏ.சி. பயன்பாடு, விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 20,583 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் மாற்றிகள், மின்சார வயர்களில் மின் சேதம் ஏற்படுவதைத் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.